திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.82 திருவான்மியூர் - திருக்குறுந்தொகை
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரிசனே.
1
பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரிசனே.
2
மந்த மாகிய சிந்தை மயக்கறுத்
தந்த மில்குணத் தானை யடைந்துநின்
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூ ரிசனே.
3
உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரிசனே.
4
படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரிசனே.
5
நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரிசனே.
6
நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்
குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரிசனே.
7
ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு வாய பரமனென்
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூ ரிசனே.
8
ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரிசனே.
9
பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரிசனே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com